இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சம்பக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பக் திருமணம் செய்து கொள்ளாமலே தனது 33 வயது காதலியுடன் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் சானிடைசர் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இளம்பெண்ணும், சம்பக்கும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் சம்பக்கிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சம்பக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.