கணவர் மற்றும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 11 மாத கைக்குழந்தை இருக்கிறது. நேற்று யுவராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.அங்கு சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே வளைவில் திரும்பிய போது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சினேகா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் யுவராஜும், குழந்தையும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சினேகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரான ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.