கடந்த 16ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடந்த குரூப் 1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, தேர்வில் யாரும் மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல், தாலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வறைக்குள் நுழையவேண்டும் எனில், பெண்கள் ஒரு துளி நகைக்கூட அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டனர்.
குறிப்பாக தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு திருமணமான பெண்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வளையலை கழற்ற முடியாமல் பல்வேறு பெண்கள் அவதிப்பட்ட நிலையில், கணவரின் கண்முன்னே அந்த வளையல்களை உடைத்துவிட்டு தேர்வெழுதச் சென்றுள்ளனர். பலகாலமாக உள்ள இந்து மக்களின் நம்பிக்கையை உடைக்கும் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் பல பேருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே திருமணம் முடிந்த பெண்கள் தாலியை கழற்றுவதில்லை.
மேலும் கையில் உள்ள வளையலை கணவர் கண்முன்னே நொறுக்கியது மனதை வலிக்கச் செய்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர். பணியிலிருந்த காவலர்களின் அதீத கடமை உணர்ச்சியே இந்நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுபற்றி மாவட்ட கூடுதல் ஆட்சியரிடம் கேட்டபோது, டிஜிட்டல் பொருட்களுக்கு மட்டுமே தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் விரும்பத்தகாதது ஆகும். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.