தோழியுடன் வசிக்க விரும்பிய பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பனங்காடி என்னும் பகுதியில் சரவணன் என்பவர் தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அலங்காநல்லூரில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் கணவர் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர் படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும், என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த வழக்கின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவல்துறையினர் ஜெயஸ்ரீயை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஜெயஸ்ரீ சென்னையில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஜெயஸ்ரீயை கையும் களவுமாக பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஜெயஸ்ரீ தனது பள்ளித் தோழியான துர்காதேவியுடன் இதுநாள் வரை வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் காதலன்-காதலியை போல பழகி வந்துள்ளனர். பள்ளிப் படிப்புக்குப் பிறகும் இந்த பழக்கம் தொடர்ந்துள்ளது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு பின்பு துர்காதேவியுடம் செல்ல வேண்டும் என்று நினைத்த அப்போது ஜெயஸ்ரீ கர்ப்பமாக இருந்தார். அதனால் கர்பமாக இருந்த சமயத்தில் துர்கதேவியை அவரால் தேட முடியவில்லை. எனவே குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே தனது குழந்தையையும், கணவரையும் விட்டுவிட்டு ஜெயஸ்ரீ, துர்காதேவியை தேடி சென்னை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
அங்கு ஜெயஸ்ரீ தான் தனது தோழியுடன் வாழ விரும்புவதாகவும், கணவன், குழந்தை , பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும், தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு தனது வாழ்வை பற்றி தீர்மானிக்கும் உரிய வயது இருப்பதால் அவரின் விருப்பப்படி செல்லலாமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ஜெயஸ்ரீயை குடும்பத்தினர் தங்களோடு வந்துவிடுமாறு கெஞ்சி அழைத்து பார்த்தனர். அவர் பெற்ற குழந்தையை காண்பித்தும் பார்த்தனர். ஆனால் ஜெயஸ்ரீ மனம் இரங்கவில்லை. பின்னர் அவர் தனது தோழியான துர்காதேவியுடன் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.