வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை மணமகனின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தார்கள்.
இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் என்பது சாதாரண ஒன்றாக மாறி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் இன்றளவும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகின்றது. இதனால் காதல் ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காவல் நிலையம், கோவில், பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றார்கள்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் குட்டம் பகுதியை சேர்ந்த ராஜ ஐஸ்வர்யா என்பவர் பட்டதாரி பெண்ணாவார். மோதிஸ்வரன் என்பவர் வேடசந்தூர் அருகே இருக்கும் புளியமரத்து கோட்டையை சேர்ந்தவர். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை செய்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் பேருந்து பயணத்தின் பொழுது பழக்கம் ஏற்பட்டு நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்கள். இதனால் போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் மோதிஸ்வரனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் காதல் ஜோடிகளை போலீசார் அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள்.