ஏரியில் உடைக்கப்பட்ட மதகை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே கல்பட்டு கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. கடந்த வருடம் நல்ல மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கலக்குவன்டா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பெண்ணையாறு மற்றும் பாலாறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் கல்குப்பம் பகுதியில் இருக்கும் ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இதன் காரணமாக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிராமமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் முற்றிலுமாக வெளியேறியுள்ளது. எனவே அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் உடைந்த ஏரியின் மதகை சீரமைக்க வேண்டும் எனவும், அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.