திருச்சி திருமலை கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை, இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒரு கட்டிடத்தை அங்கீகாரம் இன்றி கட்டலாம், பின்னர் அதில் உள்ள குறைகளை சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் ஊக்குவிக்க கூடாது. அனுமதியின்றி கட்டிடம் கட்டினால் அதனை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டமாகும். கட்டிடம் முறையாக கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து நிறைவு சான்றிதழ் பெற்ற பின்பு தான் மின்சாரம், நீர் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்படுகிறது.
நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதை இந்த சட்டத்தின் நோக்கமாகும். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடை இல்லாமல் நடக்கிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் பின்பற்றவில்லை, எனவே அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை இரண்டு வாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை வருகிற 10-ம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கை ஒத்தி வைத்தனர்.