குடிநீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சீன நாட்டு பானை ஓடுகள், உடைந்த மான் கொம்பு ஆகியவை பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகின்றது. இந்த மன்றத்தின் மூலம் மாணவர்களுக்கு பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்று சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளில் பொறித்திருக்கும் எழுத்துக்களை படிக்கவும் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு 2 தினங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்த இடத்தில் மான் கொம்பு, சீன நாட்டு பானை ஓடுகள், சிவப்பு, கருப்பு பானை ஓடுகள் ஆகியவை உடைந்து காணப்பட்டுள்ளது. இதனை அந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களான மனோஜ், டோனிகா, பாத்திமா ஷிபா, பிரவினா ஆகியோர் கண்டெடுத்து தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் செயலாளரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுருவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அவற்றை ஆய்வு செய்த ராஜகுரு மான் கொம்புகள் கி.பி. 12-13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், போர்சலைன், செலடன் என இரண்டு வகையான சீன நாட்டு பானைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகளில் மிகவும் அழகிய வடிவங்கள் உள்ளது எனவும், இவைகள் சீன நாட்டு வணிகர் வந்து சென்றதற்கு ஆதாரமான இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.