திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கார் மோதி மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பழ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜெகநாதபுரத்தில் சரவணக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பிறகு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-மதுரை நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது மதுரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
அதில் சரவணக்குமார் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.