கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவில் கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் கோட்டயம் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்ளிட்ட 13 பேரும் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிளாரம்மா, அவரின் மகன் மார்ட்டின், மனைவி ஷினி மற்றும் இந்த தம்பதிகளின் மகளான சினேகா, சந்திரா, சாந்த்ரா ஆகிய 6 பேர் உயிரிழந்த நிலையில் மண்ணில் இருந்து மீட்கப்பட்டன.
மேலும் சிசலி, வேணு, சோனியா, அவரது மகன் ஜோபி , ராஜம்மா, ஷாலட், சரசம்மா ஆகிய 7 பேரின் உடல்களும் இதில் மீட்கப்பட்டது. இவர்களின் உடல்கள் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி பலியான 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.