கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டும் ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய ஓரிரு நாட்களில் கனமழை பெய்தது. அதன் பிறகு சற்று குறைந்து, தற்போது வட மாவட்டங்களில் மீண்டும் தீவிரமாக மழை பெய்து வருகின்றது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் 20.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.