வளர்ப்பு யானை சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் ஸ்ரீனிவாசன், பொம்மன், சேரன் உட்பட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகிறது. ஊருக்குள் அட்டகாசம் செய்த இந்த காட்டு யானைகளை பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் பாகன்கள் ஈடுபடும் போது சில யானைகள் முரண்டு பிடிக்கிறது. கடந்த மே மாதம் பாகன் ஒருவர் வளர்ப்பு யானை சேரனை தாக்கியதால் அதன் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வனத்துறையினர் அந்த பாகனை தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக 7 மாதங்களுக்கு பிறகு சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, மருத்துவகுழுவினர் அளித்த சிகிச்சையால் சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.