செம்மறி ஆடு உயிரிழந்த நிலையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கண்மாயில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள தேளூர் கிராமத்தில் உள்ள கண்மாய்க்குள் மர்மமான முறையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையில் துர்நாற்றம் மற்றும் ஈக்கள் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தொண்டி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அந்த மர்ம மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர்.
அப்போது அந்த மூட்டையில் உயிரிழந்த செம்மறி ஆடு ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உயிரிழந்த செம்மறி ஆடை அப்பகுதியிலேயே குழிதோண்டி புதைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது ஒரு செம்மறி ஆடு இறந்து விட்டதால் அதனை சாக்குமூட்டையில் கட்டி கண்மாய்க்குள் வீசியது தெரிய வந்துள்ளது.