மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மணியின் மொபட்டின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த சின்ன ராமுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் இடையே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சின்ன ராமு வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் சின்னராமுவின் உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.