சூர்யா தயாரிப்பில் வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். சின்ன பட்ஜெட் படங்களையும், கடைக்குட்டி சிங்கம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 4 படங்கள் நேரடியாக அமேசன் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் படமாக அரிசில் மூர்த்தி எழுதி, இயக்கியிருந்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் வெளியானது.
இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ரங்கா படாங்கா என்ற மராத்தி படத்தின் கதையை தழுவி இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையறிந்த சூர்யா அரிசில் மூர்த்தியை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் தனது படத்தின் கதை வேறு ஒருவரின் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என அறிந்ததும் சூர்யா தானாக முன்வந்து நஷ்டஈடு கொடுத்துள்ளார். அதாவது அவர் மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.