ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ராம்குமாரிடம் கதை கேட்ட தனுஷ், ‘இந்த கதை ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலில் இருக்கிறது. இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என கூறியுள்ளார். ஆனால் கதையில் மாற்றம் செய்ய ராம்குமாருக்கு விருப்பமில்லை. தற்போது இந்த கதையை ராம்குமார் சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்கள் மீது தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தனுஷிடம் கூறிய கதையை இயக்குனர் ராம்குமார் அப்படியே சிவகார்த்திகேயனிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் தற்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் நீங்கள் கொஞ்சநாள் காத்திருக்க வேண்டும்’ என கூறியுள்ளார். ஏற்கனவே மூன்று வருடங்கள் காத்திருந்த ராம்குமார் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க என தெரியாமல் புலம்பி வருகிறார். இதனால் ராம்குமாருக்கு இந்த படத்தின் கதையை இயக்க விருப்பமில்லை எனவும் கூறி வருகின்றனர்.