வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகையை திருடிச் சென்ற இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓமலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தீவட்டிபட்டி வேடப்பன் காட்டுவளவு பகுதியில் வாழ்ந்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி மஞ்சுளா. சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் மஞ்சுளா இருந்தபோது வெங்கடேஷன் மற்றும் கிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்து மஞ்சுளாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளி பொருட்கள், செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றார்கள்.
இதையடுத்து மஞ்சுளா தீவட்டிபட்டி காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். இந்த வழக்கானது ஓமலூர் சார்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் ஏழு வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் மூன்று வருடங்கள் சாதாரண காவல் தண்டனையும் மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூபாய் 5000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.