கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் தேதி 22 வயதுடைய தர்மா என்பவர் திருச்சி, ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையடுத்து ஏர்போர்ட் காவல்துறையினர் தர்மாவை கைது செய்துள்ளனர். மேலும் தர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொள்ளை வழக்கு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதே போன்று கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி 20 வயதுடைய அப்துல் நசீர் என்பவர் பொன்மலைப்பட்டி சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையடுத்து அப்துல் நசீரை பொன்மலைப்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அப்துல் நசீர் மீது 5 -க்கும் அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தர்மா, அப்துல் நசீர் தொடர்ந்து பொது மக்களை பயமுறுத்தி பணம் பறித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இருவரையும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிறையில் இருக்கும் தர்மா, அப்துல் நசீர் ஆகிய இருவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதற்கான உத்தரவு நகல் கொடுக்கப்பட்டுள்ளது.