கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஆபாசமாக வீடியோ வெளியிட்ட சுரேந்திரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவு செய்த கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் நேற்று அவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் பின்னணி குறித்தும், அதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது ? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் ?
கந்த சஷ்டி கவசம் தொடர்பான விவகாரங்களை வீடியோ வெளியிடும்போது… யாருடைய தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்டது ? என்று பல்வேறு கோணங்களில் சுரேந்திரனிடம் விசாரிக்கப்பட்டது. அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறகு சுரேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டார்கள்.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தை தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது. எனவே சுரேந்திரனை அங்கே ஆஜர்படுத்த வாய்ப்பில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ராயபுரத்தில் இருக்கக்கூடிய மேஜிஸ்ட்ரேட் வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் வருகிற 30ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலில் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருக்கிறது. .