கறுப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்தி வரும் விவகாரத்திற்கு தற்போது இலங்கை ஜெயராஜ் பதில் அளித்துள்ளார்.
“சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” எனத்தொடங்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்தப் பாடல் வரிகளில் விளக்கமானது தலையில் தொடங்கி பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்பாக விவரித்து அதனை வேல்கள் காப்பதாக இருக்கும். இந்தப் பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலி செய்தும் விமர்சனம் செய்தும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான காணொளியானது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த சேனலின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்த சர்ச்சை தொடர்பாக இலங்கை தமிழர்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து பேட்டி ஒன்றை இலங்கை ஜெயராஜ் கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் இலங்கையையும் பாதிக்கும். இது கால காலமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் இறை நம்பிக்கையில் அவ்வாறு கிடையாது. பாரம்பரியமாக கடவுள் நம்பிக்கை கொண்ட இலங்கையில் வசிக்கும் இந்து மக்கள் அசையாத நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள். இன்று வரை அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். என்னைப் பொருத்தமட்டில் கந்த சஷ்டி கவசம் பிரச்சனை புதிதல்ல காலங்காலமாக சிறு கூட்டத்தினரால் எப்போதும் செய்யப்படுகின்ற ஒரு பிரச்சனை தான். ஆனால் தற்போது சற்று அதிகமாகவே உள்ளது. இவர்களால் இந்து மதத்துக்கோ அல்லது இந்துமத மக்களுக்கோ, முருக வழிபாட்டிற்கோ சிறு தீங்கு கூட வராது என தெரிவித்திருக்கிறார்.