தமிழகத்தில் கந்து வட்டி கொடுமைகளை தடுக்கும் நோக்கத்தில் ஆப்பரேஷன் கந்து வட்டி என்ற புதிய இயக்கத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கியுள்ளார். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்து வட்டி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கந்து வட்டி வாங்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பி.களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி,ஆன்லைன் லோன் செயலி மூலம் பெறும் வட்டி என அனைத்துமே கந்துவட்டிக்குள் அடங்கும்.
அரசு நிர்ணயம் செய்த வட்டி விகிதத்தைவிட அதிக அளவில் கந்து வட்டியில் ஈடுபட்டதாக தற்போது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் லோன் செயலி மூலமாக பொதுமக்கள் அதிகமான வட்டியை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். புகைப் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கந்து வட்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் காவல் உதவி செயலி மூலமாகவும் ஆன்லைன் லோன் ஆப் கந்துவட்டி புகார்களை 1930 என்ற எண்ணிற்கும், 100 ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கந்து வட்டி வசூலிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.