கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் காய்கறி வியாபாரி குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசித்து வருபவர் காய்கறி வியாபாரி நாகராஜன்(35). இவருடைய மனைவி 25 வயதுடைய திரிஷா, மாமியார் 40 வயதுடைய மாரியம்மாள். இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன் திடீரென்று மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாகராஜன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நான், எனது மனைவி, எனது மாமியார் ஆகிய 3 பேரும் தலைவாசல் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றோம். வரகூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வியாபார தேவைக்காக வட்டிக்கு ரூபாய் 20,000 கடன் வாங்கியுள்ளோம். ஆனால் அதில் ரூ 16 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டேன். மீதி 4 ஆயிரம் மட்டும் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை திருப்பி செலுத்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட நபர் கந்து வட்டி கேட்டு வீடுபுகுந்து எங்களிடம் தகராறு பண்ணி தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்துள்ளார். கர்ப்பிணியான எனது மனைவி வயிற்றில் மிதித்ததால் அவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த நாங்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளோம்.
இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிக வட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாகராஜன், அவரது மனைவி, மாமியார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.