வேலை வாங்கி தருவதாக கூறி 52 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூரில் ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பண மோசடி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த கயல் லலிதா, கிருஷ்ணாயாயினி பிரதீன், ரமணி, பரமேஸ்வரன், சாய் சகரியா, பிரதீபன் தீர்க்கவி ஆகியோர் கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பலரிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இதுவரை 52 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கிய ஏஜென்ட்டாக செயல்பட்ட மயிலாடுதுறையில் வசிக்கும் நடேஸ்வரி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை கைப்பற்றியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.