சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு ஆள்கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தீர்ப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் கஜமுகன் செல்லையா (வயது 55). இவர் சட்டவிரோதமாக ஆவணங்களற்று புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்குள் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இவர் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வரும்போது டூர்க்ஸ் அண்ட் சைகோஸ் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர் தனது சுயலாபத்துக்காக சட்டவிரோதமாக ஆட்களை கடத்தியதாகவும், அதற்கு கட்டணமாக அவர்களிடம் இருந்து ரூ. 16,24,000 முதல் ரூ. 34,80,000வரை வசூலித்ததாகவும் ஒப்புக்கொண்டதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் அங்கு ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த அவர், அதன் பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அட்டர்னி ஜெனெரலால் செல்லையா மீது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு செல்லையா தீர்ப்பு வழங்கும் தேதிக்காக காத்துக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.