கனடாவில் போராட்டக்காரர்கள் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தியதால் அங்கு பல மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் கனடாவில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020ஆம் ஆண்டு போராட்டக்காரர்கள் அந்நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கனடாவில் சி .ஜி.எல் குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயு கிழக்கு பிரிட்டிஸ் கொலம்பியாவில் இருந்து கொண்டுவருவதற்காக கட்டமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் கடும் ஆட்சேபனை மட்டும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 60% பணி முடிவடைந்த நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். மேலும் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் செல்லக்கூடாது என்பதற்காக சாலையில் மரங்களை வெட்டி மறைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் “அடையாளம் தெரியாத சில நபர்களால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீது புகை குண்டுகளை வீசி, தீப்பந்தங்களால் தாக்கியுள்ளனர்.இந்நிலையில் அவர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கு பல மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.