இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காததால் தாங்கள் தினசரி செத்துக் கொண்டிருப்பதாக அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி Seneca கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் வாசுதேவ் (21) பகுதிநேர பணிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ரொரன்றோவில் உள்ள Sherbourne சுரங்க ரயில் நிலையத்துக்கு வெளியே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவருடன் மற்றொரு 35 வயது நபரும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து Richard Jonathan Edwin (39) என்ற நபர் கைது செய்யப்பட்டார். இதில் Richardக்கும், அவரால் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனடாவில் தனது மகன் தங்கி இருந்த அறையிலிருந்து அவருடைய பொருட்களை சேகரிப்பதற்காக கார்த்திக்குடைய குடும்பத்தினர் ரொரன்றோ வந்திருக்கின்றனர். தனது மகன் பயிலும் கல்லூரி, அவன் தங்கியிருக்கும் அறை, அவனுக்குப் பிடித்தமான இடங்கள் அனைத்தையும் பார்ப்பதற்காக கனடாவுக்கு வர கார்த்திக்குடைய குடும்பத்தினர் பெரிதும் ஆசைப்பட்டார்கள். தற்போது அவர்கள் கனடா வந்து கார்த்திக் அறையில்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் தற்போது கார்த்திக் இல்லை. எங்களை தினசரி வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்று கார்த்திக்கின் தாயாகிய பூஜா வாசுதேவ் கூறினார். பிள்ளையை இழந்து 2 மாதங்களாக தாங்கள் சரியான தூக்கமின்றித் தவிப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கும் பூஜா, அந்நபர் கார்த்திக்கை மட்டும் கொல்லவில்லை எங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொன்று விட்டார் என்று தெரிவித்தார். எங்களது பிள்ளை ஏன் கொல்லப்பட்டான் என்று தெரியாமல் தினசரி நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று பூஜா கூறினார்.
மேலும் எனக்கு ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான், அது என் அண்ணன் என கூறும் கார்த்திக்கின் தம்பி பார்த் வாசுதேவ் (16), தற்போது அவன் இல்லாமல் வாழ்வே வெறுமையாகிப்போனதாக தெரிவிக்கிறார். அதன்பின் தானும், தன் மனைவியும் தங்களது மொத்த சேமிப்பையும் மகனுடைய கல்விக்காக செலவு செய்ததாக கார்த்திக்கின் தந்தையான ஜித்தேஷ் வாசுதேவ் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தங்களது வீட்டையும் அடமானம் வைத்து 50,000 டாலர்கள் கடன் வாங்கித் தான் தங்களது மகன் கார்த்திக்கை கனடாவுக்கு தாங்கள் அனுப்பியதாக ஜித்தேஷ் தெரிவித்தார். அந்த பணம் கார்த்திக்கினுடைய முதலாமாண்டு கல்விக்கட்டணத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்துக்காக வைத்திருந்த மொத்த பணத்தையும் செலவிட்டு பிள்ளையை கனடாவுக்கு அனுப்பிவிட்டு, தற்போது கார்த்திக்கின் குடும்பம் அவரை இழந்து தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஏன் அந்த நபர் அவரை சுட்டுக் கொன்றார் என்பது பற்றி இதுவரையிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.