கனடா திரும்பும் மக்களுக்காக அரசு புதிய கொரோனா விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளது.
கனடா திரும்பும் மக்களுக்காக ஜனவரி 7ஆம் தேதி முதல் புதிதாக கொரோனா விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. அதாவது, ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் கனடா செல்வதற்கு 72 மணி நேரத்திற்குள் முன்பாக கொரனோ பரிசோதனை செய்யப்பட்டு தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை காட்டும் ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்கும் பயணிகள் மட்டுமே கனடா செல்வதற்கான விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இது மட்டுமன்றி அந்த சோதனையானது பிசிஆர் முறையில் செய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்றாலும் கனடாவிற்கு வந்த பிறகு 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 7,50,000 டாலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று புதிய விதிமுறை தெரிவிக்கிறது.
இந்நிலையில் தற்போது வரை போக்குவரத்துத் துறைக்கான சோதனைகள் எந்த ஏஜென்சிகளில் செய்யப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பது குறித்தும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகள் பயணிகளுக்கு கடுமையான குழப்பம் மற்றும் சலிப்பை உண்டாக்கும் என்று தேசிய விமான சேவை கவுன்சிலின் தலைவர் Mike Mc Naney கூறியுள்ளார்.