தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் தரைப்பாலம் இடிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து ஏற்கனவே தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டியிருந்தது. அதன்பிறகு தற்போது சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் தரைப்பாலமும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் மீது கட்டப்படும் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.