கன மழையின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கியதால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளூர் ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதன் பிறகு தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பேருந்துகள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்படுகிறது. இதனையடுத்து பாந்த்ரா, அந்தேரி, ஜோகேஸ்வரி, கோரேகான், போரிவலி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவலர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கோலாப்பூர், சாங்லி, சோலாப்பூர், சதாரா மற்றும் புனே உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.