கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக சேதங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற ஒரு நிகழ்வு சென்னையில் ஏற்பட்டிருந்தால் சேதங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த வருடம் சென்னையில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். அந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டார். இதனால் திமுக அரசின் மீது விமர்சனங்கள் எழாமல் பாராட்டுகள் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்தால் பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும் என்பதை திமுக அரசு மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகளை தீவிர படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் கனமழையால் பாதிப்புகள் பெரும் அளவில் குறையலாம்.
ஆனால் சில இடங்களில் மட்டுமே மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், பல இடங்களில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பாக வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் லேசான மழை பெய்தாலே வெள்ளநீர் சூழ்ந்து விடும். எங்கள் பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்றதால் இந்த வருடம் மழை பெய்தால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நாங்கள் நிம்மதி அடைந்திருந்தோம். ஆனால் எவ்வளவு வேகத்தில் பணிகள் தொடங்கியதோ, அதே வேகத்தில் பணிகள் பாதியிலேயே முடங்கி கிடக்கிறது.
அதோடு சில இடங்களில் உள்ள சாலைகளில் கான்கிரீட் கால்வாய்களில் கம்பிகள் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதன் பிறகு பருவமழை தொடங்கி விட்டால் மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கான பள்ளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால் பெருமளவு விபத்துக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியை முடித்துக் கொடுக்க வேண்டும் என சென்னை வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.