தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதேபோல நேற்றும் (09ஆம் தேதி) புதுக்கோட்டை உட்பட 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (10.10.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.. காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022