தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அரசு கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, கனமழையால் 47 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர்,கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் யாருமே எதிர்பார்க்காத வகையில் கனமழை பெய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.