தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பொது இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முக்கியச் சாலை வழி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் செல்லும் வாகனங்களை 2வது அவென்யூவை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் செல்ல கூடிய வாகனங்கள் கேசவர்த்தினி சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை மழைநீர் தேங்கியுள்ளது.
எனவே அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவையா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்ணா பிரதான சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு காமாட்சி மருத்துவமனை வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.