ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வபோது மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆசனூர், தல மலை, திம்பம், குழியாடா, கேர்மாளம், தாளவாடி உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலையிலிருந்து திம்பம் போகும் சாலையிலுள்ள ராமரணை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோன்று ஆசனூரை அடுத்த அரே பாளையம் பிரிவிலிருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் போகும் சாலையிலுள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது.
இதனால் அந்த பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் திம்பம், தலைலை, காளிதிம்பம் போன்ற பகுதிகளில் பல இடங்களில் புதியதாக அருவி தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக தாளவாடி சுற்று வட்டார பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக விவசாயபணிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்திலிருந்து கடம்பூர் வழியே மாக்கம்பாளையம் போகும் அரசு பேருந்து குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிகொண்டது.
இதனால் மலை கிராம மக்கள் தங்களது கிராமங்களுக்கு போக முடியாமலும் அன்றாட தேவைகளுக்கு பொருட்களை வாங்குவதற்காக கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமலும் சிரமப்பட்டனர். வெள்ளத்தை கடக்க முடியாததால் அரசு பேருந்து மீண்டுமாக திரும்பி சத்தியமங்கலம் நோக்கிச் சென்றது. இந்நிலையில் குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் குறைந்ததனால் நேற்று பேருந்து போக்குவரத்து துவங்கியது. பின் அரசு பேருந்து மாக்கம்பாளையம் கிராமத்துக்கு சென்று வந்தது. இதனிடையில் குரும்பூர்பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என 2 காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.