வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாலைகள் சேதம் அடைந்ததாலும், சுரங்கங்களில் தண்ணீர் தேங்குவதாலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்த தகவலை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
மூடப்பட்டு சுரங்கப்பாதைகள்;
மெட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை.
வாகனங்கள் மெதுவாக அனுமதிக்கப்பட்டுள்ள சாலைகள்;
திருமலைப்பிள்ளை சாலை, பசூல்லா சாலை.
மாநகரப் பேருந்து
போக்குவரத்து மாற்றம்;
வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் மழை நீர் தேங்கியுள்ள சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீர் மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.