போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று 12 மாவட்டங்களின் கலெக்டர் உடன் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் போதிய முன்னறிவிப்பின்றி, மக்கள் எதிர்பாராத நேரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது.
இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்ற அளவை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் உள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம், நிவாரண உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.
சில இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் வீணாவதாக செய்திகள் வருகின்றது. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்ப்பாய்களைக் கொண்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்களுக்கு மாற்றி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.