தெலங்கானா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் கடிதம் எழுதியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அளவுக்கதிகமாக பெய்த மழை காரணமாக தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் கடிதம் எழுதியுள்ளார். மேலும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு 1,350 கோடி ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.