Categories
மாநில செய்திகள்

“கனவை நனவாக்க வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!

நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்க நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் தமிழ்நாடு கிரெடாய் அமைப்பினுடைய இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கட்டுமான தொழில் என்பது மக்களோடு இணைந்து இருக்கக்கூடிய ஒரு தொழில். வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை தருகின்ற தொழில் இந்த கட்டுமான தொழில். கட்டடம் என்பது சொத்து, கவுரவம் தொடர்புடையதாக இருப்பதால் இந்த தொழிலில் தொய்வு எப்போதும் இருக்காது.

நீங்கள் என்னிடம் நிறைய கோரிக்கைகள் வைப்பீர்கள். நானும் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். உங்களது திட்டமிடுதல் நடுத்தர வர்க்கத்தையும் ஏழை எளிய மக்களின் விருப்பங்களையும் நிறைவு செய்வதாக அமைய வேண்டும். முதலமைச்சராக மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் என்னுடைய கோரிக்கையை வைக்கிறேன். நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவது என்பது ஒரு கனவாக மாறியுள்ளது. அவர்களின் கனவை நனவாக்குவதற்கு நீங்கள் சிந்தியுங்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் சேர்த்து நடுத்தர ஏழை எளிய மக்களுக்கான வீடுகள் வாழ்விடங்களை உருவாக்கித் தரவேண்டும்.

தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தனியார் துறையை சேர்ந்தவர்களும் சேவை மனப்பான்மையுடன் நடுத்தரவர்க்க குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய முன்வரவேண்டும். குடிசைகள் இருக்கும் வரை நாட்டில் இருக்கக்கூடிய கோபுரங்களின் பெருமைகளை நாம் பேச முடியாது. வறுமை இருக்கும் நாட்டில் வளர்ச்சிகளை மட்டும் பேசி கொண்டே இருக்க முடியாது” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

Categories

Tech |