ஆஸ்திரேலிய கடற்கரையோரங்களில் இருந்து எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் செல்கிறோம் என்று விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி (50), ஹர்திக் பாண்டியா (63) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.. அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 170 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த தோல்வியை இந்திய அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய அணி வெற்றிபெற்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனால் இந்திய அணியின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சில ரசிகர்கள் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்படி மட்டமாக தோற்று விட்டார்களே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் இருப்பினும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய கடற்கரையோரங்களில் இருந்து எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல், எங்கள் இதயங்களில் வேதனையுடன் செல்கிறோம், ஆனால் ஒரு அணியாக பல மறக்கமுடியாத தருணங்களை எடுத்துச்செல்கிறோம், மேலும் இங்கிருந்து எங்களை சிறப்பாக மேம்படுத்திகொள்வோம்.
மேலும் மைதானங்களில் எங்களை ஆதரித்த எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஜெர்சியை அணிந்து நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Thank you to all our fans who turned up in huge numbers throughout to support us in the stadiums. Always feel proud to wear this jersey and represent our country 🇮🇳💙
— Virat Kohli (@imVkohli) November 11, 2022