தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதி பற்றாக்குறை உள்ளதாக 4 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞான மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க தர்மபுரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்கனவே 150 ஒரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டதாகவும் நாமக்கல் திருப்பூர், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் நிதி பற்றாக்குறையாக இருப்பதால் இரண்டு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் நிதிப்பற்றாக்குறை இருப்பதாக அளிக்கப்பட்ட அறிக்கையை நிராகரித்து நீதிபதிகள் அப்பகுதிகளில் வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தியோ அல்லது உபரி நிதி உள்ள மாவட்டங்களில் இருந்து நிதியை பெற்றோ கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.