லண்டனில் வசிக்கும் பெண் தன் 31 வயதில் தன்னை பெற்ற தாயை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பெண் யாஷிகா, தன் 18 வயதில் தன் பெற்றோரிடமிருந்து அதிர்ச்சியான செய்தியை கேட்டுள்ளார். அதாவது அவர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் யாஷிகாவின் வளர்ப்பு பெற்றோர் டொனால்ட் மற்றும் யசந்தா கடந்த 1980 ஆம் வருடத்தில் யாஷிகாவை தத்தெடுத்துகொண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரிட்டன் வந்ததாக கூறியுள்ளார்கள்.
எனினும் வளர்ப்பு பெற்றோர் அவரை அரவணைப்புடன் வளர்த்ததால் அவருக்கு தன் பெற்றோரின் நினைப்பு வராமல் இருந்துள்ளது. அதன்பிறகு யாசிகா தன் 31 வயதில் பெண் குழந்தை பெற்றுள்ளார். அப்போதுதான் அவருக்கு தன் தாயும் இதேபோன்று தானே தன்னை பெற்றிருப்பார். இந்த அளவிற்கு பாசத்தால் பிணைந்திருக்கும் குழந்தையை அவருக்கு எப்படி தத்துக் கொடுக்க மனம் வந்தது என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
மேலும் யாஷிகாவின் வளர்ப்பு பெற்றோர்கள் இலங்கையிலிருந்த ஒரு வீட்டிலிருந்து யாஷிகாவை வாங்கியபோது ஒரு பெண் சத்தமாக கதறி அழுத சத்தம் கேட்டது என்று கூறியுள்ளனர். இதனால் யாஷிகா தன் தாயை பார்த்தே ஆக வேண்டும் என்று, அவரது கணவருடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அதன்பின்பு அவர் பிறந்த கொழும்பு என்ற பகுதிக்கு சென்று தாயை தேடியுள்ளார்கள். அங்கு அவரது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரின் தாய் இருக்குமிடம் தெரிந்துள்ளது. எனினும் அவர் தான் தத்துக் கொடுத்த மகளை தற்போது சந்திக்க விரும்புகிறாரா? என்பது தெரியவில்லை. மேலும் யாஷிகா லண்டனுக்கு திரும்பும் நேரம் வந்ததால் அவர் தன் தாயை சந்திக்காமலேயே அரை மனதுடன் பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார். எனினும் யாஷிகாவின் தாயை கண்டுபிடிக்க உதவியாக இருந்த சிரி செல்வா என்ற நபர் அவர் தாயிடம் பேசி, அவர் யாஷிகாவிடம் பேச விரும்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது கொரோனா காலமாக இருப்பதால் தன் தாயை நேரடியாக சந்திக்க முடியவில்லை என்றாலும் வீடியோ கால் வாயிலாக சந்தித்து பேசியுள்ளார் யாஷிகா. அப்போது இருவருக்கும் ஆனந்த கண்ணீர் மல்க நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது. அதன் பின்பு யாஷிகா அவரது கணவர் மற்றும் குழந்தைகளை தாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.