கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் சராசரியாக பத்தாயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கும் அழைத்து செல்லப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழக அரசு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. தற்போது படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் படகு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவா சண்முகராஜா மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் இரு சொகுசு படகு சவாரியையும் தொடங்குவதற்கான ஏற்பாட்டை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு விவசாய கலவை பூச்சு பணியையும் விரைந்து முடிக்குமாறு கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரண்டு சொகுசு படகுகளையும் படகு துறையிலிருந்து வட்டகோட்டைக்கு சென்று வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்டமாக படகுகளை பிற இடங்களுக்கு இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இதில் 700 முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் மாத சீசனில் தொடங்கப்பட உள்ள படகு பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வசதியும் தொடங்கப்பட உள்ளது என கூறியுள்ளனர்.