கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் வெஞ்ஞாறு மூடு பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் முதலில் தனியார் ஐ.டி துறையில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தனியார் பள்ளியிலும் பணியாற்றினார். இதனிடையில் அனஸ் ஹஜாஸ் ஸ்கேட்டிங் மீதுள்ள ஆர்வத்தால் யாருடைய உதவியும் இன்றி தாமாகவே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஸ்கேட்டிங்கில் அவர் பலவிதமான சாகசங்களை செய்து பரிசுகளை குவித்துள்ளார்.
அதன்பின் புதியதாக சாதிக்கவேண்டும் என எண்ணி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாகசம் பயணம் மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். அதன்படி சென்ற மேமாதம் 29-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ஸ்கேட்டிங் சாகசப் பயணத்தை தொடங்கினார். மதுரை ,பெங்களூர், ஹைதராபாத் வழியே பயணித்த அனஸ் ஹஜாஸ் மத்திய பிரதேசம், உத்திரபிரதேசத்தை கடந்து ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளார்.
இன்னும் சுமார் 15 தினங்களில் காஷ்மீர் சென்று தன் சாகசபயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை லாரி ஒன்று மோதிய விபத்தில் அனஸ் ஹஜாஸ் மரணம் அடைந்துள்ளார். இதனிடையில் அனஸ் ஹஜாஸ் செல்போனுக்கு நண்பர் ஒருவர் அழைத்தபோது எதிர் முனையில் பேசியவர் இந்த விபத்து சம்பவத்தைக் தெரிவித்துள்ளார்.
அதாவது ஹரியானா மாநிலம் பஞ்சகுதா பகுதி அருகில் விபத்தில் சிக்கியதாகவும், அவரை அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அனஸ்ஹாஜாஸின் உடலைப் பெறுவதற்காக அவரது பெற்றோர்கள் ஹரியானா சென்று உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பயணத்தை முடித்து சாதனை படைக்க இருந்த அனஸ் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் ஸ்கேட்டிங் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.