விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அண்டராயநல்லூர் கிராமத்தில் விவசாயியான சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலத்தில் டி. புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் பயிர் செய்து வந்துள்ளார். ஆனால் முருகன் குத்தகை பணம் கொடுக்காததால் நிலம் சின்ராசுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் முருகன் சின்ராசு சாகுபடி செய்திருந்த சவுக்குக் கன்றுகளை பிடிங்கி நாசம் செய்துள்ளார்.
இதுகுறித்து தட்டிக் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முருகன் சின்ராசுவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று சின்ராசுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.