தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் அவ்வப்போது திடீரென பெய்யும் மழையின் காரணமாக கூரைவீடு மற்றும் மண்சுவர் வீட்டில் இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கன மழை பெய்யும் போது மண்சுவர் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள சின்ன சாத்தப்பாடி பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தம்மாள் (76). இவர் குடிசைவீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது மூதாட்டி கோவிந்தம்மாள் தன் வீட்டிலுள்ள கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் இந்த மழை காரணமாக வீட்டின் சுவரானது திடீரென மூதாட்டி மீது இடிந்துவிழுந்தது.
இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் இடிபாடுகளுக்குள் இருந்த கோவிந்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.