சிவகங்கை மாவட்டத்திலுள்ள தி.புதுப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அடைக்கலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபடி வீரரான அடைக்கலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நரியங்காடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் குன்றக்குடி அணிக்காக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் வெற்றி பெற்ற அணி அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகியது.
இதனை அடுத்து சக வீரர்களுடன் போட்டி முடிந்த பிறகு பேசிக் கொண்டிருந்த அடைக்கலம் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த சகவீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த நண்பர்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அடைக்கலம் கபடி போட்டி மூலம் அரசு பதவி அடைய வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்ததாக கூறி கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.