எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியருமான கபிலன் வைர முத்துவின் புது நாவலை டிரைக்டர் பாரதி ராஜா சென்னையில் வெளியிட்டுள்ளார். ஆகோள் என பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இன சட்டம் பற்றி ஒரு நவீன அணுகு முறையை முன்வைக்கிறது. இந்த நாவலானது நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக கொண்டு எழுதப்பட்டு உள்ளது.
கடந்த 1920ம் வருடம் கைரேகை சட்டத்துக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கியமான பகுதியாக இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆகோள் தொடர்பாக பாடலாசிரியர் கபிலன் கூறியதாவது, சங்ககாலத்தில் சிற்றரசுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரில் எதிராளிகளினுடைய ஆடு-மாடுகளை களவாடும் செயலுக்குதான் ஆகோள் என்று பெயர்.
இது களவுச்செயலாகவும் வீரச்செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றை களவாடும் செயல் என்ற பொருளில் எனது நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பு வைத்துள்ளேன். இக்கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் பற்றியும், 100 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த 2 ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயன் உள்ள பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.