பூச்சி மருந்து தெளித்து கொண்டிருக்கும் போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திலிருந்து வியட்னாம் நாட்டிற்கு செல்ல சரக்கு கப்பல் தயாராக இருந்தது. இந்த கப்பலில் பல டன் எடையுள்ள சோளம் லோடு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சோளம் கெடாமல் இருப்பதற்காக தொழிலாளர்களான ராமசாமி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தானியங்களை பதப்படுத்தும் ஒவ்வொரு அறையாக மருந்து தெளித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தனர்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கப்பல் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் ஜெகதீஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூச்சிமருந்து தெளிக்கும்போது அதிகப்படியான நெடியால் இருவரும் மயங்கி விழுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.