தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 250 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பைடன் 46வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். மேலும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பைடனுக்கும், கமலா ஹரிஷுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஜோ பைடன் சிறப்பான வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மேலும் நீங்கள் முன்பு துணை அதிபராக பதவி வகித்த போது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு ஆற்றிய பங்களிப்பு மதிப்பு மிக்கது. தற்போது மீண்டும் இந்திய-அமெரிக்க உறவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல உங்களுடன் இணைந்து செயலாற்றுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்று கூறியுள்ளார். இதேபோன்று கமலாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, “கமலா ஹரிஷ் அவர்களே உங்களுடைய வெற்றி மகத்தானது. இது ஒட்டுமொத்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் உங்களுடைய உறவினர்களுக்கு பெருமை தரக்கூடியது. உங்களின் ஆதரவுடன் இந்திய அமெரிக்க உறவு இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.