நகராட்சி நிர்வாக அதிகாரிகள் திடீரென கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சில ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக கமிஷனர் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது காமராஜர் சாலை அருகே உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சியை உணவுக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அதன் பிறகு கடைக்கு ரூபாய் 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன் பிறகு முடக்கி நாடார் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிமையாளருக்கு ரூபாய் 20,000 அபராதமும் விதித்தனர். இதேபோன்று சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளது. இந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் 1250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.